7 அக்., 2012

18 மணி நேர மின்வெட்டால் கடும் அவதி: திருச்சியில் நள்ளிரவில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருச்சி, அக். 7-

திருச்சி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக நாள் ஒன்றுக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. அதாவது ஒரு மணி நேரம் மின்சார விநியோகம் இருந்தால் அடுத்த 3 மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபட்டு வந்தது. இதனால் சிறு, குறுந்தொழில்கள் முற்றிலும் முடங்கின.

மேலும் வீடுகளில் மக்கள் எந்த ஒரு பணியும் மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தனர். இந்த மின்தடை நேற்று மேலும் அதிகரித்தது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று இரவு கீழப்புலிவார்டு ரோடு, இ.பி.ரோடு, அந்தோணியார் கோவில் தெரு, அண்ணா நகர், விறகுபேட்டை, கருவாட்டுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மின்வெட்டை கண்டித்து இ.பி.ரோடு துணை மின்நிலையம் முன்பு திரண்டனர். அவர்கள் மின்வாரிய அதிகாரிகளிடம் மின்வெட்டுக்கான காரணம் குறித்து விளக்கம் கேட்டனர்.

ஆனால் முறையான பதில் இல்லாததால் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். அப்போது கடுமையான மின்வெட்டை எதிர்த்தும், அதிகாரிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். மறியல் காரணமாக இ.பி.ரோட்டில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

அப்போது அந்த வழியாக வந்த லாரியின் கண்ணாடியை பொதுமக்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. தகவல் அறிந்ததும் கோட்டை சரக உதவி போலீஸ் கமிஷனர் சேகர், இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் ஏராளமான போலீசார் விரைந்து வந்தனர்.

அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் மின்சார விநியோகம் சீரானால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வோம் என்று உறுதியாக கூறினர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகர போலீஸ் துணை கமிஷனர் செல்வகுமார், தாசில்தார் காதர்மொய்தீன், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அருள்தேவராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக மின்சாரம் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுத்தனர்.

பின்னர் பொதுமக்கள் அந்த இடத்தை விட்டு கலைந்து சென்றனர். நள்ளிரவில் நடந்த இந்த சாலை மறியலால் திருச்சியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக