11 அக்., 2012

பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான 13 பஸ்கள் பறிமுதல்: தனிப்படை போலீசார் இன்று நடவடிக்கை

மதுரை, அக். 11- 

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள கிரானைட் மோசடியில் ஈடுபட்ட பி.ஆர்.பழனிச்சாமி பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். அவரது மகன்கள் சுரேஷ்குமார், செந்தில்குமார் உள்ளிட்ட கிரானைட் அதிபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள். 

கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்தி வரும் தனிப்படை போலீசார் பி.ஆர்.பழனிச்சாமிக்கு சொந்தமான அலுவலகங்கள், வீடுகள் ஆகியவற்றில் ஏற்கனவே சோதனை நடத்தி கிரானைட் தொடர்பான முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.

பி.ஆர்.பழனிச்சாமிக்கு ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பது விசாரணையில் தெரியவந்தது. அவரது சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். 

இந்த நிலையில் இன்று காலை மாட்டுத்தாவணியில் உள்ள பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கு சென்ற தனிப்படை போலீசார் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 13 பஸ்களை உடனடியாக பறிமுதல் செய்தனர். 

மேலும் ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் அன்னராஜா தலைமையில் அங்கிருந்த ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து பி.ஆர்.பி. டிரான்ஸ்போர்ட் அலுவலகத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிரானைட் ஆவணங்கள் மற்றும் முக்கிய தஸ்தா வேஜூக்களை கடத்தவும் இந்த பஸ்களை பயன்படுத்தியதாக தெரிகிறது. 

இதைத்தொடர்ந்து முதல் கட்டமாக 13 பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக