10 செப்., 2012

உதயகுமார் தலைமறைவு! வீடு வீடாக சோதனையிட்டது போலீஸ்!



கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்புவதை எதிர்த்து போராட்டக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர். இன்று அணுமின் நிலையத்தின் பின்புறமாக, கடல் வழியாக வந்து முற்றுகை போராட்டம் நடத்த முயன்றார்கள். முற்றுகையிட வந்த போராட்டக்காரர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல வேண்டும் என்று ஐ.ஜி.,ராஜேஸ்தாஸ் போராட்டக்காரர்களிடம் கேட்டுக்கொண்டிருந்தார். இந்நேரத்தில் இதில் ஆவேசமுற்ற ஒரு சிலர் ஐ.ஜி.,யுடன் நின்று கொண்டிருந்த போலீஸ்காரர் ஒருவரை தாக்கினர்.'

அப்போது போலீசார் எவ்வளவோ சொல்லியும் கேட்கவில்லை. இதனையடுத்து அவரை மீட்க போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியது. கண்ணீர் புகை குண்டுகள் வீசியது. போலீஸ் தடியடியை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கடலில் இறங்கினர். சிலர் கடலில் நீந்திச்சென்றனர்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் படகில் ஏறி தப்பிவிட்டார். ப்போராட்டத்தை தூண்டிவிட்டதாக அவரை கைது செய்ய போலீசார் தீவிரமாக உள்ளனர்.

இதையடுத்து உதயகுமாரை தேடி இடிந்தகரையில் போலீஸ் நுழைந்தது. இடிந்தகரை தேவாலயத்திற்குள் நுழைந்து தீவிர சோதனை நடத்தியது போலீஸ். மேலும் இடிந்தரையில் உள்ள அனைத்து வீடுகளிலும் நுழைந்து உதயகுமாரை தேடியது.


இதை தொடர்ந்து இடிந்தகரையில போலீஸ் தடியடி நடத்தியதை கண்டித்து தென் மாவட்ட கடலோர பகுதிகளில போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. உவரி, பழைய காவல், குலசேகரப்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர் பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் சாலை மறிய-ல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் அமைதியான முறையில் போராடிவரும் கூடங்குளம் மக்கள் மீது காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தாக்குலைக் கைவிட்டு அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கூடங்குளம் அணுமின் உலையில் எரிபொருளை நிரப்பக்கூடாது என்றும் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து அமைதியான முறையில் அறவழியில் மக்கள் கட்டுப்பாடாக இன்று போராட்டத்தில் பங்கேற்றனர். கடந்த ஓராண்டு காலத்தில் வன்முறைக்கு துளியளவில் இடம் கொடுக்காமல் அமைதி வழியில் போராடிவரும் மக்கள் மீது திடீரென்று சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் தடியடித் தாக்குதல் நடத்தியும் படகுகளை அடித்து நொறுக்கியும் காவல்துறையினர் பெரும் வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். அரசின் இந்தப் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

அறவழியில் போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல், அவர்களது கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்காமல் தமிழக அரசு காவல்துறையை ஏவி அவர்களை மிரட்டுவதும் தாக்குவதும் கடுமையான கண்டனத்துக்குரியது. இதுவரை கூடங்குளம் அணு உலையைப் பார்வையிட வந்த அரசு இயந்திரத்தைச் சார்ந்த எவரும் மக்களைச் சந்தித்துப் பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அங்கு குவிக்கப்பட்டிருக்கும் காவல்துறையினர் மக்களுக்கிடையில் ஊடுருவி போராட்டத் தலைவர்களை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இத்தகைய அணுகுமுறை ஜனநாயகத்துக்கு விரோதமான ஒன்று என்பதை விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக் காட்ட விரும்புகிறது.

அணுஉலைக்கெதிராக அமைதியான முறையில் போராடி வரும் மக்கள் மீது காவல்துறையினரின் அடக்குமுறையைக் கைவிட்டு அணுஉலையில் எரிபொருள் நிரப்புவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மகத்தான பல மாற்றங்கள் மக்களின் தீவிரமான போராட்டங்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன என்று வரலாறு சொல்லும் செய்தியை புறந்தள்ளிவிடாமல் அரசு உடனடியாக போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்திட முன்வரவேண்டும். குறிப்பாக போராட்டக் குழுத் தலைவர் உதயகுமார் அவர்களுடன் முதலமைச்சர் ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக