29 செப்., 2012

தமிழக சட்ட சபை சபாநாயகர் டி. ஜெயக்குமார் ராஜினாமா

சென்னை, செப். 29-

சென்னை ராயபுரம் தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர் டி.ஜெயக்குமார். முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் அமைச்சராக பணியாற்றிய அவர், கடந்த ஆண்டு மே மாதம் அ.தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றபோது சட்ட சபை சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

இன்று காலை ஜெயக்குமார் தனது சபாநாயகர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை அவர் துணை சபாநாயகர் தனபாலிடம் கொடுத்தார்.

இதையடுத்து ஜெயக்குமாரின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக அரசு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயக்குமார் ராஜினாமா தொடர்பாக தமிழக சட்டசபை செயலாளர் ஏ.எம்.பி. ஜமாலுதீன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழக சட்டசபை சபாநாயகர் த.ஜெயக்குமார் இந்திய அரசியலமைப்புச் சட்டம் 179 (பி) பிரிவின்கீழ் 2012-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29-ந்தேதி காலை தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். சபாநாயகர் பதவி காலியானதால், அரசியலமைப்புச் சட்டம் 180(1)-வது பிரிவின் கீழ் சபாநாயகர் அலுவலக பணிகளை இனி துணை சபாநாயகர் ப.தனபால் கவனிப்பார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மே மாதம் 16-ந்தேதி ஜெயக்குமார் சபாநாயகராக பதவி ஏற்றார். கடந்த ஆண்டு மே மாதம் 23-ந்தேதி ஜெயக்குமார் தலைமையில் முதல் சட்டசபை கூட்டத் தொடர் நடந்தது. பிறகு ஜூன் மாதம் முதல் பட்ஜெட் கூட்டத் தொடரை ஜெயக்குமார் நடத்தினார்.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரைக்கான கூட்டத்தை ஜெயக்குமார் நடத்தினார். கடந்த பிப்ரவரி தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை அவர் பட்ஜெட் கூட்டத் தொடரை நடத்தினார். அடுத்த மாதம் (அக்டோபர்) தமிழக சட்டசபை வைர விழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென பதவியில் இருந்து விலகி இருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஜெயக்குமாரின் ராஜினாமா இன்றே தமிழக அரசிதழிலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நன்றி நக்கீரன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக