30 ஆக., 2012

சென்னை சென்ட்ரல் முன்பு பா.ஜ.கவினர் திடீர் மறியல்: 100 பேர் கைது





சென்னை, ஆக. 30-

மார்த்தாண்டத்தை அடுத்த நித்திரவிளையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் டெய்லர் கடை நடத்தி வந்த எட்வின்ராஜ் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாவட்ட பா. ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதைக் கண்டித்து இன்று மார்த்தாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சியினர், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் தடையை மீறி மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் இன்று மாலை சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு பா.ஜ.க. சார்பில் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பு குவிந்தனர். அவர்கள் அங்கு மறியல் செய்ய முயன்ற போது போலீசார் கைது செய்தனர்.

இதில் பங்கேற்ற பா.ஜ.க. மாநில செயலாளர் வானதி சீனிவாசன், மாவட்ட செயலாளர்கள் ரவிச்சந்திரன், ஜெய்சங்கர், பிரகாஷ் உள்ளிட்ட அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றிச் சென்றனர்.

இதனால் சென்ட்ரல் ரெயில் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை, ஆக. 30-


பா.ஜனதா தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கன்னியாகுமரி மாவட்டத்தில் சமீபகாலமாக அமைதியான சூழ்நிலை இருப்பது போன்று தோற்ற மளித்தாலும் ஆங்காங்கு மதமாற்ற நடவடிக்கைகளும், இந்து மதத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் நடைபெற்ற ஒரு கொலை சம்பவத்தில் சம்பந்தமே இல்லாமல் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி தலைவர் தர்மராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதைக் கண்டித்து இன்று நாகர்கோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அவர்கள் கைது செய்து அடைக்கப்பட்டுள்ள மண்டபத்திற்குள் காவல் துறையினர் தடியடி நடத்தியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. கைது செய்யப்பட்டுள்ள மாநிலத்தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து பாரதீய ஜனதா கட்சி தொண்டர்களும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி மாலைமலர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக