7 ஜூலை, 2012

ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும்:

சென்னை, ஜுலை.7- 
பள்ளிகளுக்கு ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும்: அரசு உத்தரவு 

பள்ளிக்கல்வி இயக்குனர் பி.மணி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கூடங்களில் சமுதாயத்தின் பல்வேறு நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் ஒருங்கே சமநிலையில் கல்வி பயில்கிறார்கள். பள்ளிகளில் அந்த மாணவ-மாணவிகள் இடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வு உருவாகும் நிலையைத் தவிர்க்கவும், அனைவரும் சமநிலையில் உள்ளவர்கள் என்ற சமத்துவ மனநிலையை அவர்கள் உள்ளங்களில் உருவாக்கவும் அனைத்து நிலையில் உள்ள மாணவ-மாணவிகளுக்கும் ஒரேமாதிரியான சீருடை வழங்கப்பட்டு, அவர்கள் சீருடையில் வரும் முறை நீண்ட காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நல்லதோர் உதாரணமாகவும், வழிகாட்டியாகவும் செயல்பட வேண்டிய உன்னதமான பணியில் உள்ள ஆசிரியர்களும், ஆசிரியைகளும், பள்ளிக்கு வரும்போது தங்களது ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்துவரும் முறையில் பதவிக்குரிய கண்ணியமும், நமது பண்பாட்டிற்கும் கலாசாரத்திற்கும் உகந்த நாகரிகமும் இருப்பது அவசியம்.

ஆசிரியர்கள், ஆசிரியைகள் கண்ணியக்குறைவாகவும், மாணவ-மாணவிகள் இடையே ஏற்றத்தாழ்வையும், மனச்சலனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், மரியாதை குறைவையும் ஏற்படுத்தக்கூடிய வகையில் உடை அணிவதை தவிர்க்க வேண்டும்.

இதை எல்லாம் வலியுறுத்தி ஏற்கனவே அறிவுரை வழங்கப்பட்டபோதிலும் சமீப காலமாக இந்த அறிவுரைகள் ஆங்காங்கே சில ஆசிரியர்களால் முறையாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்பது எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்த நிலை மிகவும் வருந்தத்தக்கது.

பள்ளி மாணவ-மாணவிகளிடம் பாதிப்பையும், சமுதாயத்தில் பொது மக்களிடையே அதிருப்தியையும், ஏற்படுத்தக்கூடிய இத்தகைய நிலை வருங்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டும். ஆசிரியர்கள், ஆசிரியைகள் பள்ளிக்கு வரும்போது பதவிக்குரிய கண்ணியத்திற்கு சிறிதும் களங்கம் ஏற்படாத வகையில் ஆடை மற்றும் அணிகலன்களை அணிந்து வருமாறும் அநாகரீகமான முறையில் உடை அணிந்து பள்ளிக்கு வருவதை தவிர்க்குமாறும் அனைத்து பள்ளி ஆசிரியர்களுக்கும், ஆசிரியைகளுக்கும் அறிவுறுத்துமாறு மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்றுவதில் தவறுகளோ, குறைபாடுகளோ சிறிதும் ஏற்படா வண்ணம் ஆசிரியர்களின் நடவடிக்கைகள் இருப்பதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

இதேபோல், மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகனும் ஆடை கட்டுப்பாடு குறித்து அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்...

நல்ல உத்தரவு...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக