8 ஜூலை, 2012

அன்புமணிக்கு எதிராக வாரன்ட்


புதுடில்லி : இந்தூரைச் சேர்ந்த மருத்துவக் கல்லூரியில், மாணவர்களைச் சேர்க்க, சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், ஆஜராகத் தவறிய மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு, டில்லி கோர்ட் வாரன்ட் பிறப்பித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ளது, இன்டெக்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம். இங்கு, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் இல்லாத நிலையில், மாணவர்களைச் சேர்க்க, கடந்த 2008ம் ஆண்டில், சட்ட விரோதமாக அனுமதி வழங்கியதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரித்த சி.பி.ஐ., மத்திய சுகாதாரத் துறை முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாஸ், இரண்டு அரசு உயர் அதிகாரிகள் உட்பட, பலர் மீது, குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகும்படி, டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், பல முறை சம்மன் அனுப்பியது. இருந்தாலும், அன்புமணி ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கை, நேற்று விசாரித்த டில்லி சிறப்பு கோர்ட் நீதிபதி தல்வந்த் சிங், முன்னாள் அமைச்சர் அன்புமணி ராமதாசுக்கு எதிராக, ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்க உத்தரவிட்டார்.

நீதிபதி மேலும் கூறுகையில், ""அன்புமணி ராமதாஸ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என விரும்புகிறேன். தனக்கு அனுப்பப்பட்ட சம்மன்களை, அவர் வேண்டுமென்றே தவிர்ப்பது போல தெரிகிறது. அதனால், 10 ஆயிரம் ரூபாய் ஜாமினில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பிக்கிறேன்,'' என்றார்.
நன்றி தினமலர் 
சட்டம் எல்லோருக்கும் சமம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக